
பொதுமக்கள் முன்பு நடுரோட்டில் வைத்து மூன்று இளைஞர்களை, சீருடை அணிந்த காவல்துறை அதிகாரிகள் லத்தியால் அடிக்கும் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டம் தெனாலி பகுதியில் சீருடையில் அணிந்திருந்த போலீசார், மூன்று இளைஞர்களின் கால்களில் லத்தியால் பலமுறை அடித்துத் தாக்கினர். சாலையில் 3 இளைஞர்களை அமரவைத்து அவர்களது கால்களில் போலீசார் லத்தியால் தாக்கினார். அந்த இளைஞர்கள் வலியால் அலறி துடித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுமக்கள் முன்னிலையில் பொது இடத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு பல தரப்பிலும் இருந்து கண்டன குரல் எழுந்து வருகிறது.
போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர்கள், தெனாலி மற்றும் மங்களகிரியைச் சேர்ந்த செப்ரோலு ஜான் விக்டர் (25), கரிமுல்லா (21), மற்றும் டோமா ராகேஷ் (25) என்பதும், அவர்கள் மூவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த மாதம் கஞ்சா போதையில் இருந்த மூன்று பேரும், காவலர் கண்ணா சிரஞ்சீவியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், 3 பேரையும் கைது செய்து நடுரோட்டில் வைத்து அடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இளைஞர்களை தாக்கிய சம்பவத்தை கண்டித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, காவல்துறையின் நடவடிக்கை மிக கொடூரமாக உள்ளது என்றும் சட்டவிரோதமானது என்றும் விமர்சனம் செய்துள்ளது. மூவரிடம் இருந்து போலீசார் லஞ்சம் கேட்டதாகவும், அவர்கள் லஞ்சம் கொடுக்க மறுத்த போது அவர்களை போலீசார் தாக்கியுள்ளனர் என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.