பொய் புகார் அளித்ததாக வாக்குமூலம்; பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு!

POCSO case against Brij Bhushan Singh dismissed after confession of false complaint!

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன்சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்த சூழ்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன்சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வேண்டும் என மல்யுத்த வீரர்கள்வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட பல வீரங்கணைகள் இரவு பகலாக பல நாட்கள் டெல்லியில் போராடி வந்தனர். நாளுக்கு நாள் இவர்களின் போராட்டம் வீரியமடைய சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும் பெற்றது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் டெல்லி போலீசார், பிரிஜ் பூஷன்சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர்.

அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ), பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பிரிஜ் பூஷன் சிங் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரிஜ் பூஷன்சிங் மீதான போக்சோ வழக்கை டெல்லி நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்ததை தொடர்ந்து 18 வயதுக்குட்பட்ட வீராங்கனையும் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னரே, பிரிஜ் பூஷனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அந்த சிறுமி வாபஸ் பெற்றார். அதனால், புகார்தாரர் வாபஸ் பெறுவதற்கான முடிவு கட்டாயத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதா என்பதை விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பொய்யான புகாரை அளித்ததாக சிறுமியின் தந்தை திடுக்கிடும் வாக்குமூலத்தை முன்வைத்தார். அதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 15 2023 சிறுமி சம்பந்தப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில், போக்சோ வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தின் நீதிபதி கோமதி மனோச்சா முன்பு விசாரணைக்கு நேற்று (26-05-25) வந்தது. அப்போது காவல்துறை சமர்பித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

brij bhushan singh Delhi high court POCSO
இதையும் படியுங்கள்
Subscribe