
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
அதாவது 9 இடங்களில் இலக்குகள் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்திற்கிடையே இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தைக் குறைக்கத் தயார் எனப் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் அவரது தலைமையில் மத்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது பிரதமர் மோடி, கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விளக்கத்தை அளித்தார். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது அவர் குடியரசுத் தலைவரிடமும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். அதே சமயம் மத்திய அரசு சார்பாக நாளை (08.05.2025) நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்த வகையில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திர்னாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் நாளை காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.