PM Modi speech he don't own a house, not even a bicycle

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத்தேர்தலை எதிர்க்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜார்க்கண்ட மாநிலம், பாலமு மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

அப்போது அவர், “கடந்த 25 வருடங்களில் முதலமைச்சராகவும், பிரதமராகவும் இருந்த என் மீது எந்த ஊழலும் இல்லை. எனக்கு சொந்தமாக வீடு இல்லை, சைக்கிள் கூட இல்லை; ஊழல் செய்த ஜே.எம்.எம், காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துக்களைக் குவித்தனர். நான் உயிருடன் இருக்கும் வரை, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அரசியலமைப்பை மாற்றியமைக்க காங்கிரஸின் எந்தத்திட்டத்தையும் அனுமதிக்க மாட்டேன்.

புதிய இந்தியாவுக்கு எதிரி எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தத் தெரியும். இப்போது சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் அதிர்ந்த பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள், காங்கிரஸின் இளவரசரை இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர். 500 ஆண்டுகளாகப் போராடிய தலைமுறைக்குப் பிறகு ராமர் கோயிலைக் கட்டவும், ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவை நீக்கியதற்கும் பா.ஜ.க பங்களித்தது.

Advertisment

உங்களின் ஒரு வாக்கு பலத்தால் ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370-ன் சுவர் பூமிக்கு அடியில் புதைந்துவிட்டது. ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பசுபதி முதல் திருப்பதி வரை நக்சலிசமும், பயங்கரவாதமும் பரவி, இந்த நிலமே ரத்த வெள்ளத்தில் மூழ்கியது. உங்களின் ஒரு வாக்கு பல தாய்மார்களின் நம்பிக்கையை நிறைவேற்றி இந்தப் பூமியை நக்சலைட் பயங்கரவாதத்திலிருந்து விடுவித்தது” என்று கூறினார்.