Advertisment

“கொடூரமான ஆட்சி” - மம்தா பானர்ஜியைக் கடுமையாகத் தாக்கி பேசிய பிரதமர் மோடி!

PM Modi slams Mamata Banerjee

Advertisment

முர்ஷிதாபாத் கலவரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கிப் பேசினார்.

மேற்கு வங்க மாநிலம், அலிப்பூர்துவார் பகுதியில் பா.ஜ.க சார்பில் இன்று (29-05-25) பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “மேற்கு வங்க மாநிலம், பிரச்சனைகளால் நிறைந்த மாநிலம். பரவலான ஊழல், வன்முறை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவிக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தான் காரணம். முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் என்ன நடந்ததோ அதுவே இங்கு அரசாங்கத்தின் இரக்கமற்ற தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சமாதானபடுத்துகிறோம் என்ற பெயரில் குண்டர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது. அரசாங்கத்தை நடத்தும் ஒரு கட்சியினர், மக்களின் வீடுகளை அடையாளம் கண்டு எரிக்கும்போதும், காவல்துறையினர் வெறும் பார்வையாளர்களாகச் செயல்படும்போதும் ஏற்படும் கொடூரமான சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள்.

வங்காளத்தில் கூச்சலும், குழப்பமும் நிலவுகிறது. இந்த கொடூரமான அரசாங்கம் நமக்கு தேவையில்லை. ஊழல்களால் ஏற்படும் மோசமான விளைவுகளால் இளைஞர்களும், ஏழை மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எதிர்காலத்தை சீர்குலைக்கிறது. இது சில ஆயிரம் ஆசிரியர்களின் அழிவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்வி முறையும் சீர்குலைக்கிறது. இப்போதும் கூட அவர்கள் தங்களது தவறுகளை ஒப்புக்கொள்ள மறுத்து நீதிமன்றத்தை குற்றம் சொல்கிறார்கள். ஏழை மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் எதிராக ஏன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிராக இருக்கிறது?. மத்திய அரசு நிறைய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது, ஆனால் மாநில அரசாங்கம் அந்த திட்டங்களை மேற்கு வங்காளத்தில் செயல்படுத்த மறுக்கிறது. மம்தா பானர்ஜியின் கட்சி 24 மணி நேரமும் அரசியல் செய்கிறதே தவிர, மேற்கு வங்காள வளர்ச்சிக்கோ அல்லது நாட்டின் முன்னேற்றத்திற்கோ முன்னுரிமை கொடுப்பதில்லை. வங்காள மண்ணில் இருந்து 140 கோடி இந்தியர்களின் சார்பாக ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என அறிவிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisment

தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா பெரும்பான்மை வாக்கெடுப்பின் அடிப்படையில் நிறைவேறியது. அதனை தொடர்ந்து, இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, வக்ஃப் வாரிய புதிய சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வக்ஃப் புதிய சட்டத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது.

இதற்கிடையில், வக்ஃப் வாரிய சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை தடுத்து காவல்துறையினருக்கும், போராட்டாக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனம் உள்பட பல வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது, கற்கள் வீசப்பட்டது. இதனால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mamata Banerjee modi murshidabad west bengal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe