Skip to main content

“காங்கிரஸுக்கு பழங்குடி சமூகத்தின் மீது அக்கறை இல்லை” - பிரதமர் மோடி

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

PM Modi says Congress doesn't care about tribal community

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு  நேற்று (07-11-23) காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

 

அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சித்தி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் நேற்று (07-11-23) நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் என்னை திட்டுவதற்கு ஒரு நாளும் மறந்ததில்லை. நம் இந்திய நாட்டில் முதல் பழங்குடியினப் பெண் ஜனாதிபதி ஆவதைக் கூட காங்கிரஸ் விரும்பாமல் அதை எதிர்த்தது. 

 

காங்கிரஸ் கட்சியினருக்கு பழங்குடியினர் நலன்களின் மீது அக்கறை இல்லை. மாறாக அவர்களின் வாக்குகள் மீது மட்டுமே அக்கறை இருக்கிறது. அதேபோல், நாட்டின் தலைமை தகவல் ஆணையராக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பொறுப்பேற்றார். அதன் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பிதழை அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலும், காங்கிரஸ் அதில் கலந்து கொள்ளாமல் நிராகரித்து விட்டது” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்