PM Modi said Thank to the people of Arunachal Pradesh

நாடாளுமன்றத்தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

60 சட்டமன்றத்தொகுதிகளைக் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தன. 60 சட்டமன்றத்தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

ஏற்கெனவே முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கனவே வெற்றிபெற்ற 10 தொகுதிகளையும் சேர்த்து 42 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 1 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 7 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் கிட்டத்தட்ட பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.

Advertisment

இந்த நிலையில், பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘நன்றி அருணாச்சல பிரதேசம். இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள் வளர்ச்சி அரசியலுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர். தங்களின் நம்பிக்கையை மீட்டெடுத்ததற்காக அருணாச்சலப் பிரதேச மாநில பா.ஜ.கவுக்கு என் நன்றிகள் மீண்டும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக எங்கள் கட்சி இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும். அருணாச்சலப் பிரதேச மாநில பா.ஜ.கவினர் மாநிலம் முழுவதும் சென்று மக்களுடன் இணைந்த விதம் பாராட்டுக்குரியது’ எனத் தெரிவித்துள்ளார்.