Skip to main content

“நான்தான் பாலத்தை கட்டவேண்டும் என்பது பகவான் கிருஷ்ணரின் முடிவு” - பிரதமர் மோடி பெருமிதம்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 PM Modi proudly says It was Lord Krishna's decision that I should build the bridge

குஜராத் மாநிலத்தில், 4 வழி கொண்ட கேபிள் பாலம் ஒன்றை பிரதமர் மோடி நேற்று (25-02-24) திறந்து வைத்தார். நாட்டின் மிக நீண்ட பாலமான இந்த பாலத்திற்கு சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து, துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் மூழ்கி பிரதமர் மோடி பார்வையிட்டு பிரார்த்தனை செய்தார். மேலும் அவர், நீருக்கடியில், கிருஷ்ணருக்கு அடையாளமாக மயில் இறகுகளை கொண்டுசென்று காணிக்கையாக செலுத்தினார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதன் பிறகு, துவாரகாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “குஜராத்தில் நான் முதல்வராக இருந்த போது, நான் சுதர்சன் சேது திட்டத்தை, அப்போது இருந்த காங்கிரஸ் அரசிடம் முன்வைத்தேன். ஆனால், அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. சுதர்சன் பாலத்தை நான் கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் சாத்தியப்படுத்தியுள்ளார். இன்று துவாராகவிற்கு நான் ஒரு மயில் தோகையை எடுத்துச் சென்று சமர்ப்பித்துள்ளேன். இன்று என் கனவு நனவாகியதால் என் இதயம் உணர்ச்சிகளால் நிரம்பி வழிகிறது.

புதிய இந்தியாவுக்கான உத்தரவாதத்தை நான் மக்களுக்கு வழங்கியபோது, எதிர்கட்சிகள் என்னை கேலி செய்தனர். ஆனால் இன்று ஒவ்வொரு இந்தியனும் தங்கள் கண் முன்னே ஒரு புதிய இந்தியா கட்டப்படுவதை பார்க்க முடிகிறது. காங்கிரஸ், நீண்ட காலம் ஆட்சியில் இருந்த போதிலும் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களின் முயற்சி அனைத்தும் ஒரு குடும்பத்தை மட்டும் முன்னேற்றுவதற்காகவே. இருந்தது. ஊழல்களை மறைத்து ஐந்தாண்டுகள் எப்படி அரசாங்கத்தை நடத்துவது என்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தது. 

2014-ல் நீங்கள் அனைவரும் என்னை ஆசிர்வதித்து டெல்லிக்கு அனுப்பிய போது கொள்ளையடிக்கப்படாமல் நாட்டைக் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இப்போது இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதன் விளைவுதான் இப்போது இந்தியாவில் நீங்கள் பார்க்கக்கூடிய கட்டுமான அற்புதங்கள்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.