Skip to main content

“பிரதமர் மோடி இன்றுவரை மணிப்பூருக்கு வரவில்லை” - ராகுல் காந்தி எம்.பி.

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
PM Modi has not visited Manipur till date

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற நடைப்பயணத்தை  கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகரில் மொத்தம் 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நீதி யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் இந்த ஒற்றுமை யாத்திரைக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி தர மறுத்தது. பின்பு கடந்த 10 ஆம் தேதி, இம்பால் மாவட்ட ஆட்சியர், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணம் இன்று தொடங்கியுள்ளது. இந்த நடைப்பயணம் மணிப்பூரிலிருந்து மும்பை வரை நடைபெற உள்ளது. இன்று (14.01.2024) முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை இந்த நடைப்பயணம் நடக்கவுள்ளதாகத் திட்டமிட்டுள்ளனர். 66 நாட்களுக்கு மேலாக 6713 கிலோமீட்டர் நடக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 110 மாவட்டங்கள் 100 மக்களவைத் தொகுதிகள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாத்திரையின் தொடக்க விழாவில் ராகுல் காந்தி பேசுகையில், “லட்சக்கணக்கான மக்கள் மணிப்பூரில் இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி இன்று வரை மணிப்பூர் வரவில்லை. பிரதமர் மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்கவில்லை. மணிப்பூர் மக்களின் வலியை நாங்கள் புரிந்துகொண்டோம். உங்களது சோகமும், வலிகளும் எங்களுக்கு நன்றாகவே புரியும். மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம். பிரதமர் மோடி, பாஜகவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதவில்லை என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்