PM Modi eulogizes MGR

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று (17-01-24) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு அதிமுக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஏராளமான நிகழ்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், பிரதமர் மோடி, மறைந்த எம்.ஜி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராகவும் இருந்தார்.

Advertisment

அவரது படங்கள், குறிப்பாக அவரது சமூக நீதி கொள்கை வெள்ளித்திரைக்கு அப்பால் பல இதயங்களை வென்றன. ஒரு தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்த அவர், தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.