PM Modi condoles Vijayakanth's

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

இந்த செய்தியறிந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மேலும், விஜயகாந்த்தின் உடலை மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குவிந்திருந்த பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலக பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்த்தின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது கவர்ச்சியான நடிப்பு கோடிக்கணக்கானவர்களின் இதயங்களை கவர்ந்தது.

ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டு அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். பொது சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விஜயகாந்த்தின் மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை நிரப்புவது கடினம். நெருங்கிய நண்பரான விஜயகாந்த்துடனான நினைவுகளை அன்புடன் நினைவுகூர்கிறேன். அவரைபிரிந்து வாடும், அவரது குடும்பத்தினர், மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment