PM Modi condemns Nitish Kumar

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசால் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி (02.10.2023) வெளியிடப்பட்டது.

Advertisment

இதையடுத்து பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் நேற்று (07.11.2023) வெளியிட்டிருந்தார். மேலும் பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 65 சதவீதமாக உயர்த்த முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் பேசுகையில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டியது அவசியம். தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 20 சதவீதமாகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதமாகவும் உயர்த்த பரிந்துரை செய்கிறேன்.

Advertisment

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 43 சதவீதமாக அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு ஏழைகள் இருப்பது சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 7 சதவீத பட்டதாரிகள், ஓபிசி பிரிவில் யாதவ் உள்ளிட்ட சமூகத்தினர் ஏழைகளாக இருப்பது தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார். மேலும் அவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, தனது கருத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும், அதனை திரும்பப் பெற்று கொள்வதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “பெண்களை இழிவுபடுத்துபவர்களை எதிர்த்து அந்த கூட்டணியில் இருப்பவர்கள் ஒரு வார்த்தை கூட சொல்ல தயாராக இல்லை. பெண்களைப் பற்றிய இத்தகைய பார்வையை கொண்டிருப்பவர்களால் மக்களுக்கு எதாவது நன்மை செய்ய முடியுமா?. உலகத்தின் முன் இந்தியாவை இழிவுபடுத்துகிறீர்கள்” என்று பேசினார்.

Advertisment