/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi-mic-art_0.jpg)
பிரதமர் மோடி மாதந்தோறும் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி முலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். அதன் 121வது பகுதியாக இன்று (27.04.2025) பிரதமர் மோடி பேசுகையில், “நான் உங்களுடன் இன்று பேசும்போது, ​​என் இதயத்தில் ஒரு ஆழமான வேதனை இருக்கிறது. ஏப்ரல் 22ஆம் தேதி (22.04.2025) பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒவ்வொரு குடிமகனின் மனதையும் உடைத்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனைவரும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
பயங்கரவாத தாக்குதலின் படங்களைப் பார்த்த பிறகு ஒவ்வொரு குடிமகனும் கோபத்தில் கொதித்துக்கொண்டிருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், நாட்டின் எதிரிகளுக்கும் ஜம்மு-காஷ்மீர் மீதான எதிரிகளுக்கும் அது பிடிக்கவில்லை. பயங்கரவாதிகளும் அவர்களின் எஜமானர்களும் காஷ்மீர் மீண்டும் அழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால்தான் இவ்வளவு பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில், நாட்டின் ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம். இந்த சவாலை எதிர்கொள்ள நமது உறுதியை வலுப்படுத்த வேண்டும்.
உலகத் தலைவர்கள் என்னை அழைத்திருக்கிறார்கள், கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள், செய்திகளை அனுப்பியிருக்கிறார்கள். இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை அனைவரும் கடுமையாக கண்டித்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில், 1.4 பில்லியன் இந்தியர்களுடன் முழு உலகமும் துணை நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன். இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும், குற்றவாளிகளும் மிகக் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்” எனப் பேசினார்.
முன்னதாக காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)