Skip to main content

“பழங்குடியின பெண்களை ஊடுருவல்காரர்கள் குறிவைக்கின்றனர்” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
PM Modi alleges Infiltrators are targeting tribal women

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் ஆறு கட்டங்களாக 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, இறுதிக் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், இமாச்சலப்பிரதேசம் என உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன் பின்னர், ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், “ஜார்க்கண்ட் மீது ஒரு பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது, அது ஊடுருவல். சந்தால் பர்கானாஸ் ஊடுருவல் சவாலை எதிர்கொள்கிறது. பல பகுதிகளில், பழங்குடியினரின் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருவதால், ஊடுருவல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊடுருவல்காரர்கள் பழங்குடியினரின் நிலங்களை அபகரிக்கின்றனர். பழங்குடியின பெண்கள், ஊடுருவல்காரர்களின் இலக்காக உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. அவர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. 

பழங்குடியின பெண்கள், 50 துண்டுகளாக வெட்டப்படுகிறார்கள். உயிரோடு எரிக்கப்படுகிறார்கள். ஒருவரின் நாக்கு பிடுங்கப்பட்டது. பழங்குடியின பெண்களைக் குறிவைக்கும் இவர்கள் யார்? ஜே.எம்.எம் அரசாங்கம் ஏன் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது? ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்த போதிலும், ஜார்க்கண்டின் ஒரு மாவட்டத்தில், அது வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இந்துக்களுடன் தொடர்புடையது அல்ல, கிறிஸ்தவ சமூகத்துடன் தொடர்புடையது. ஞாயிற்றுக்கிழமை 200-300 ஆண்டுகளாக விடுமுறையாக இருந்தது. இப்போது, அவர்கள் கிறிஸ்தவர்களோடும் சண்டை போடுகிறார்கள். 

2014க்கு முன்பு காங்கிரஸ் 24×7 கொள்ளையில் ஈடுபட்டதால் மோசடிகள் வாடிக்கையாக இருந்தன. ஆனால், நான் அதிகாரத்திற்கு வந்த பிறகு, அதை நிறுத்தினேன். ஜார்க்கண்டில், ஜே.எம்.எம் மற்றும் காங்கிரஸும் பரவலான கொள்ளையை நடத்தி வருகிறார்கள். ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'என் நண்பர் மீது தாக்குதல்'-பிரதமர் மோடி கண்டனம்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
 'Attack on my friend'-PM Modi condemns

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அங்கு தேர்தல் பரப்புரை அமெரிக்காவில் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் அதிபர் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் அதிபர் ஒபாமா 'நமது ஜனநாயகத்தில் அரசியல் சார்ந்த வன்முறைகளுக்கு இடம் இல்லை. ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்' என தெரிவித்துள்ளார். அதேபோல் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் 'டிரம்பிற்கு தனது முழு ஆதரவை அளிப்பதாகவும் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறை தலைமை அதிகாரி பதவி விலக வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஒ சுந்தர் பிச்சை, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டின் போது அவருடைய ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட  ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 'Attack on my friend'-PM Modi condemns

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என்னுடைய நண்பர் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசியலிலும்,ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை' என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மக்களவைத் தேர்தல் தோல்வி; எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Lok Sabha election failure Edappadi Palaniswami advice

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றது. புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்று (10.07.2024) முதல் வரும் 19 ஆம் தேதி வரை தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தலா 6 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளிடம் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடிய நிர்வாகிகள் செல்போன் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.