ADVERTISEMENT

"கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.. அறிக்கையை வெளியிடுங்கள்" - என்.வி ரமணாவிற்கு கடிதம் எழுதிய விவசாய பிரதிநிதி!

07:06 PM Sep 07, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் ஆகியவற்றை நடத்திய விவசாயிகள், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை வீட்டிற்குத் திரும்பப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இதனால் ஒன்பது மாதங்களுக்கு மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இதனிடையே, வேளாண் சட்டங்கள் குறித்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதித்தது. மேலும் வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, பாரதிய கிசான் சங்கத் தலைவர் பூபிந்தர் சிங் மன், சர்வதேச கொள்கைகள் குழுத் தலைவர் பிரமோத் குமார் ஜோஷி, விவசாயப் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி, அனில் கன்வத் ஆகியோர் இடம்பெற்ற நால்வர் குழுவை அமைத்தது. ஆனால் பாரதிய கிசான் சங்கத் தலைவர் பூபிந்தர் சிங் மன், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அக்குழுவிலிருந்து விலகினார். இந்தநிலையில், மூன்று பேரோடு இயங்கி வந்த இந்தக் குழு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி, முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை மீது உச்சநீதிமன்றம் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வுகாண உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவில், விவசாயிகளின் பிரதிநிதியாக இடம்பெற்ற அனில் கன்வத், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், தங்களது அறிக்கைக்கு உச்சநீதிமன்றம் எந்த கவனத்தையும் அளிக்கவில்லை எனத் தான் உணர்வதாக தெரிவித்துள்ளார்.

அனில் கன்வத் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது; எங்களது அறிக்கைக்கு உச்சநீதிமன்றம் எந்த கவனத்தையும் அளிக்கவில்லை என நான் உணர்கிறேன். குழுவின் உறுப்பினராக, குறிப்பாக விவசாய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவனாக, விவசாயிகளால் எழுப்பப்பட்ட பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்பது குறித்தும், போராட்டம் தொடர்வது குறித்தும் நான் வேதனைப்படுகிறேன். எங்களது குழு, அனைத்து பங்குதாரர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிக்கையில் இணைத்துள்ளது. விவசாயிகளின் அனைத்து அச்சங்களையும் விவரித்துள்ளது.

நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எங்களது பரிந்துரைகள் வழிவகுக்கும் எனக் குழு நம்புகிறது. எங்களது அறிக்கையின் மீது பொது விவாதம் நடத்தப்படவேண்டும். விவசாயிகளின் போராட்டத்தில், அமைதியான தீர்வை எட்டுவதற்குப் பரிந்துரைகளை அமல்படுத்தும் விதமாகக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்திடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT