/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfgdg_7.jpg)
இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதரைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் பலமுறை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளதாகத் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகதூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் நான்காவது குற்றவாளியான சந்தீப் நாயர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்வப்னா கேரள அரசியல்வாதிகளுடனும் மூத்த அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பழகியது தொடர்பான பல தகவல்கள் என்.ஐ.ஏ விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதரைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் பலமுறை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளதாகத் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாகக் கொச்சியில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அண்மையில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முதல்வர் பினராயி விஜயன், 2017 ஆம் ஆண்டு பல முறை ஐக்கிய அரபு அமீரக தூதரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், முதல்வர் அலுவலகத்தின் நடந்த இந்தச் சந்திப்புகளில், கேரள அரசின் முதன்மைச் செயலராகப் பணியாற்றிய எம்.சிவசங்கரை, கேரள அரசின் அதிகாரப்பூர்வ தொடர்பு நபராக, தூதரிடம் முதல்வர் பினராயி விஜயன் அறிமுகப்படுத்தியதாகவும் ஸ்வப்னா தெரிவித்துள்ளதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில்,ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள கேரள முதல்வருக்கு இந்த குற்றப்பத்திரிகை மேலும் சிக்கலை அதிகப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)