/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dss_1.jpg)
கேரளாவில் நடைபெற்ற தங்கக்கடத்தல் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசு இதுகுறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்தது. பொதுவாகத் தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யமாட்டார்கள். ஆனால், இந்தத் தகவலை அடுத்துக் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்கக் கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடக்கிவிடப்பட்டது.
இந்நிலையில் விசாரணையின் போது, தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமீரக நாட்டுத் தூதரகத்தில் பணியாற்றியிருந்த ஸ்வப்னா, அங்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி இதனைச் செய்துவந்துள்ளதாகச் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, இதுதொடர்பாக சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், தகவல் தொடர்புத் துறைச் செயலராகவும், கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலராகவும் இருந்த சிவசங்கருடன் ஸ்வப்னா தொடர்பிலிருந்துள்ளதாகக் கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிவசங்கரிடம் 30 கிலோ தங்கக்கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் ஒரு துறையில் பணியாற்றும் ஊழியரும், அதன் செயலரும் தங்கக்கடத்தல் விவகாரத்தில் சிக்கியிருப்பது கேரளா அரசிற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தத் தங்கக்கடத்தலில் முதல்வர் அலுவலகத்திற்குத் தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு இதுகுறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் பினராயி விஜயன். அவரின் இந்தக்கடிதத்தில், "கேரள தங்கக் கடத்தல் வழக்கில் அனைத்து ஏஜென்சிகளையும் பயன்படுத்தி விரைந்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக் கடத்தலின் ஆரம்பம் முதல் அது சென்றடையும் இடம் வரையிலான அனைத்தும் முழுமையாகக் கண்டறியப்பட வேண்டும். குற்ற வழக்கில் அனைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்பட வேண்டும். விசாரணை ஏஜென்சிகளுகளுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)