நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மத்திய அரசு மூன்றாம் கட்ட தளர்வுகளை வெளியிட்டுள்ளது. இந்தத் தளர்வுகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வருகிறது. சுதந்திரதின விழா கொண்டாட்டம் தனிமனித இடைவெளியுடன் நடைபெற வேண்டும்.
மெட்ரோ ரயில், திரையரங்கங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் இயங்க தடை நீடிப்பு. ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி. திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்குத் தடை நீடிக்கிறது. கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அமலில் இருக்கும். ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்படத் தடை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகளில் பார்வையாளர்கள், ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் வீரர்கள் பயிற்சி பெறலாம். குறைந்த அளவில் உள்நாட்டு விமானங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி, சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு. வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வரும் பணி தொடர்ந்து நடைபெறும். கரோனா பாதிப்பு சூழலைக் கருத்தில் கொண்டு மாநில அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.