ADVERTISEMENT

‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது’ - மக்களவையில் மத்திய அரசு திட்டவட்டம்

11:18 AM Dec 16, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை ஏறப்போவது குறித்து கடந்த டிச.12 ஆம் தேதி நமது நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், 2017 ஆம் ஆண்டு ஜூன் முதல் பெட்ரோலிய விலை நிர்ணயத்தை பெட்ரோலிய நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றியதுடன் இனி தினசரி கச்சா எண்ணெய் விலையேற்ற இறக்க சூழலுக்கேற்ப பெட்ரோல் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்குமென்று அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்படாமல் சிறிது சிறிதாகவே உயர்த்தப்படுமென்றும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதற்கேற்ப விலை குறையவும் செய்யுமென்றும் தெரிவித்தார். இதனால் நுகர்வோர்களுக்கு நல்லதொரு பயனளிப்பதாக இருக்குமென்றும் கூறினார். அப்போதைய காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை சராசரியாக பீப்பாய்க்கு 60 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. அதில் பெரிய மாற்றங்கள் இல்லாததால் பெட்ரோல், டீசல் விலையேற்றமும் மக்களைப் பெரிதும் பாதிக்காததாக இருந்தது.

பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கச்சா எண்ணெய் விலை இதைவிடக் குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் உயர்த்திக்கொண்டே சென்றார்கள். அதேபோல், கொரோனா ஊரடங்கு காலத்தில் கச்சா எண்ணெய் விலை அடிமட்டத்துக்குப் போனபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. கொரோனாவுக்குப் பின்னரும்கூட கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசைக் கேள்வியெழுப்பும் போதெல்லாம், இதெல்லாம் எங்கள் கைகளில் இல்லை; எண்ணெய் நிறுவனங்கள்தான் முடிவெடுக்குமென்று கூறினார்கள். ஆனால், எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டாலோ, இதெல்லாம் பெட்ரோலிய அமைச்சகத்திடம் தான் கேட்க வேண்டுமென்று கூறின.

ஆனால், இதில் உண்மை என்னவெனப் பார்த்தால், பெட்ரோலிய அமைச்சகத்துக்கே இதுகுறித்த மறைமுகப் பவர் இருப்பதாகத் தெரிகிறது. எப்படியென்றால், இந்தியாவில் எப்போதெல்லாம் மாநிலத் தேர்தல்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலை சிறிது நாட்களுக்கோ சில மாதங்களுக்கோ மாற்றமில்லாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள்.

தற்போது குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தலுக்கு முன்பாகவும் ஆறு மாத காலத்துக்கு விலை மாற்றமில்லாமல் பார்த்துக் கொண்டார்கள். இதையெல்லாம் கவனிக்கும்போது இந்த விலையேற்ற இறக்கங்களில் பெட்ரோலிய அமைச்சகமே அரசுக்கு சாதகமாக விலையேற்ற, இறக்கத்தை நிர்ணயிப்பதாக அறிய முடிகிறது. எனவே, தற்போது இரு மாநிலத் தேர்தல்களும் முடிவடைந்துள்ள நிலையில் இனி பெட்ரோல், டீசல் விலையேற்றம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறியிருந்தோம்.

இந்நிலையில், மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. முரளிதரன் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாதது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், “2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது குறைந்த அளவில்தான் உள்ளது. 1974 ஐ ஒப்பிடும்போது கடைசி எட்டு ஆண்டுகளில் விலையேற்றம் என்பது மிகக்குறைவுதான். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது. இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கிறது” எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறியும், மத்திய அமைச்சரின் இந்தப் பதிலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT