Petition filed in Supreme Court seeking permission to conduct NEET Postgraduate exam

நீட் முதுகலை தேர்வு என்பது முதுகலை மருத்துவப் படிப்புகளைப் பயில விரும்பும் மருத்துவ பட்டதாரிகளுக்கான தகுதித் தேர்வு ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2025) நீட் முதுகலை தேர்வு ஜூன் 15ஆம் தேதி (15.06.2025) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “2 ஷிப்ட் அடிப்படையில் நடைபெற இருந்த தேர்வை ஒரே ஷிப்ட் அடிப்படையில் நடத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “நீட் முதுகலை தேர்வில் வெளிப்படைத்தன்மை முழுமையாகப் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பான தேர்வு மையங்கள் அடையாளம் காணப்பட வேண்டும். எனவே நீட் முதுகலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

Advertisment

மேலும் ஒரே ஷிப்டில் தேர்வு நடத்தப்படும் என்பதால் அதிக அளவில் தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இந்த தேர்விற்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் முதுகலை தேர்வை ஆகஸ்ட் 1ஆம் தேதி (01.08.2025) நடத்த அனுமதி கோரி மருத்துவ தேர்வு வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.