Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Petition against Prime Minister Modi dismissed

Advertisment

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.