Advertisment

தி ரியல் கேரள ஸ்டோரி... இளைஞரின் உயிரைக் காக்க ஒன்று திரண்ட மலையாளிகள்

People who saved Kerala youth's life by collecting blood money in Saudi Arabia

Advertisment

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது கோடம்புழா. இப்பகுதியைச் சேர்ந்த தம்பதி முல்லா முஹம்மது - பாத்திமா. இவர்களது மகன் அப்துல் ரஹீம். இவரின் தந்தை இறந்த நிலையில், அப்துல் ரஹீம் கடந்த 2006-ஆம் ஆண்டு ஹவுஸ் டிரைவர் விசாவில் சவூதி அரேபியா சென்றார். அப்போது அவரது வயது 26. வேலை தேடிச்சென்ற அப்துல் ரஹீமுக்கு சவூதியின் ஒரு வீட்டில் வாகனம் ஓட்டும் பணியுடன், அந்த வீட்டு முதலாளியின் மாற்றுத்திறனாளி சிறுவனைப் பராமரிக்கும் பணியும் கொடுக்கப்பட்டது. சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறப்பு கருவி மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அவ்வப்போது வீல் சேர் மூலமும், காரிலும் சிறுவனை மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்புவது அப்துல் ரஹீமின் வேலையாக இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி எப்போதும் போல மாற்றுத்திறனாளி சிறுவனை அப்துல் ரஹீம் காரில் மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ட்ராபிக் சிக்னல் விழுந்ததால் கார் சிறிது நேரம் நின்றுள்ளது. ஆனால், காரின் பின் பகுதியில் அமர்ந்திருந்த சிறுவன் காரை இயக்க சொல்லி அடம்பிடித்துள்ளார். உடனே, கார் ஓட்டுனர் அப்துல் ரஹீம் சிக்னல் மீறிச் செல்ல கூடாது என சிறுவனிடம் எடுத்துக்கூறியுள்ளார். ஆனாலும், சிறுவன் பின் சீட்டில் இருந்தபடி சத்தம்போட்டு பிரச்சனை ஏற்படுத்தியிருக்கிறார். மீண்டும் சிக்னலை மீறக் கூடாது எனக் கூறி புரியவைப்பதற்காக திரும்பியபோது அப்துல் ரஹீமின் முகத்தில் சிறுவன் பலமுறை எச்சில் துப்பியிருக்கிறார். அதை தடுப்பதற்காக அப்துல் ரஹீம் கையை நீட்டியபோது சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணத்தில் தெரியாமல் கை பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சிறுவன் மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அதனைக் கவனிக்காத அப்துல் ரஹீம் மறுபடியும் வண்டியைஒட்டிச் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுவனின் பேச்சு சத்தம் கேட்காத நிலையில், அப்துல் ரஹீம் பின்பக்கம் திரும்பி பார்த்து அதிர்ந்து போயுள்ளார். சிறுவன் காரிலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அப்துல் ரஹீம் நடந்த சம்பவத்தைக் கூறி, அரேபியாவில் வேலை செய்துவந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த முஹமது நசீர் என்பரிடம் உதவிக்கேட்டுள்ளார். அவர் கொடுத்த ஐடியாவின் படி பணம் பறிக்க வந்த கொள்ளைக்காரர்கள் அப்துல் ரஹீம்மை கட்டிப்போட்டு சிறுவனை தாக்கியதாக முதலாளியிடம் நாடகம் ஆடினார். ஆனால், போலீஸ் விசாரணையில் உண்மை தெரிய வர இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், முஹம்மது நசீர் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

Advertisment

ஆனால், அப்துல் ரஹீம் குற்றவாளி என அறிவித்த கோர்ட் அவருக்கு மரண தண்டனை விதித்தது. கடந்த 18 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் அல் ஹைர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே மனம் இறங்கி வந்த சிறுவனின் பெற்றோர் இழப்பீடாக பிளட் மணி என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் கேட்டனர். அதன் இந்திய மதிப்பு 34 கோடி ரூபாய் ஆகும். அதனையும் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்தால் அப்துல் ரஹீம் உயிர் தப்பிக்கலாம்என்ற நெருக்கடி ஏற்பட்டது.

இதனை அறிந்த அப்துல் ரஹீமின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் சவுதி அரேபியால் பணிபுரியும் மலையாளிகள் என அனைவரும் இணைந்து “சேவ் அப்துல் ரஹீம்’ என்ற செயலியை உருவாக்கி நிதி திரட்டினர். அத்துடன், சிறுவனின் மரணத்திற்கு அப்துல் காரணம் இல்லை எனவும் அது தற்செயலான ஒன்று எனவும் விளக்கமளித்திருந்தனர். இதனிடையே, குறுகிய நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி 34 கோடிக்கும் கூடுதலாகவே நிதி வந்தடைந்துள்ளது.

இதையடுத்து, இந்தியா தூதரகம் மூலம் சவுதியில் உள்ள சிறுவனின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் மகனுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும், 18 ஆண்டுகளுக்கு பிறகு மகனை காண இருப்பதாக அப்துல் ரஹீமின்தாய் பாத்திமா உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த நற்செய்தியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது ஒரு உண்மையான கேரளக் கதை. இதன்மூலம் வகுப்புவாதத்தால் உடைக்க முடியாத சகோதரத்துவக் கோட்டை கேரளா என்பது உறுதியாகி உள்ளது. உலகத்தின் முன் கேரளாவை பெருமைப்படுத்திய இந்த நோக்கத்திற்காக அனைத்து நல் உள்ளங்களையும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம். வெளிநாடுவாழ் மலையாளிகளின் பங்கு, இந்த முயற்சியின் பின்னணியில் இருப்பது பாராட்டுக்குரியது. இந்த ஒற்றுமைக்காக நாம் ஒருமனதாக முன்னோக்கிச் செல்வோம்..” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை உமிழும் `தி கேரளா ஸ்டோரி' போன்ற படத்தைக் கொண்டாடும் பாஜகவிற்கு கேரள முதல்வர் பதிலடி கொடுத்திருப்பதாக கேரள மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரியல் கேரள ஸ்டோரி இதுதான் என அப்துல் ரஹீமுக்கு மக்கள் செய்திருக்கும் உதவியைக் கொண்டாடி வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்றிணைந்து 34 கோடியைத்திரட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe