Advertisment

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்; போலீசாருக்கு எதிராக மக்கள் போராட்டம்

People struggle against police in Manipur

Advertisment

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு, பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பிறகு நடந்த வன்முறை காரணமாக நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கிடையில் மே மாதம், குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா தொடங்கி சர்வதேசஅளவில் கண்டனங்கள் குவியவே பிரதமர் மோடி, ‘பழங்குடியின பெண்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும், மணிப்பூரில் தற்போது அமைதி நிலவி வருகிறது’ என்றார். இதனைத் தொடர்ந்து, மணிப்பூரில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று அம்மாநில முதல்வரும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மணிப்பூரில் சற்று அமைதி திரும்பி இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறைகள் அரங்கேறி வருகிறது.

Advertisment

இந்த சிலையில் சில தினங்களுக்கு முன்பு அதிநவீன ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், போலீஸ் சீருடையைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறி கிராமத்தை காவல் காத்துக்கொண்டிருந்த மைத்தேயி சமூகத்தை சேர்ந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும், அவர்கள் நிரபராதி என்று கூறி 5 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள் முன்பு மைத்தேயி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் செய்த மக்களை போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர், இதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

manipur police
இதையும் படியுங்கள்
Subscribe