Skip to main content

காட்டினை காக்க போராட்டத்தில் குதித்த மும்பை மக்கள்... ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள்...

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

மும்பை ஆரே வனப்பகுதியிலுள்ள மரங்களை வெட்ட எதிர்ப்பு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

people protest for aarey forest

 

 

மும்பையின் ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிமனை அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள  2,700 மரங்களை வெட்டுவதற்கு மும்பை மாநகராட்சி, மும்பை மெட்ரோ ரெயில் கழகத்துக்கு அனுமதி அளித்துள்ளது. சுமார் 16 சதுர கிரோமேட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதியில் அண்மையில் மரம் வெட்டும் பணியை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆரே காலனியை வனப்பகுதியாக அறிவிக்க கோரியும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் நான்கு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, மரம் வெட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. நள்ளிரவில் மரங்கள் வெட்டப்பட்டு வந்த சூழலில், பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டதாக 38 பேர் மீது வழக்கு பதிவு செய்து, இது தொடர்பாக 20 பேர் கைதும் செய்துள்ளனர். இந்த நிலையில் மரம் வெட்ட அனுமதியளிக்க கூடாது என பல திரைத்துறை பிரபலங்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்றும் போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் ஆரே காலனி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, அரே காலனி மக்களுக்கு ஊர்மிளா மடோன்கர், தியா மிர்சா, ஷ்ரத்தா கபூர், ஃபர்ஹான் அக்தர் உள்ளிட்ட பாலிவுட், பூஜா ஹெக்டே போன்ற பிரபலங்கள் தங்களின் ட்விட்டர் பக்கம் வாயிலாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.