People criticizing BJP in Manipur issue

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இங்கு பைரன்சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து, சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பின்னணியில், பாஜக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மைத்தேயி சமூக மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேறி இருக்கும் நிலையில், அவர்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது, ஏற்கனவே நலிவடைந்து இருக்கும் பழங்குடியின மக்களை மேலும் பாதிக்கும் எனும் கருத்து அப்பகுதியில் பரவலாக மேலெழுந்தது.

Advertisment

இந்நிலையில் மைத்தேயி மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கினால் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பலன்கள் குறைவதோடு பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலமும் படிப்படியாக ஆக்கிரமிக்கப்படும் என பழங்குடியின மக்கள் கவலை தெரிவித்தனர். இதனால், இதற்கு பழங்குடி சமூகமாக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடியினர், கடந்த மே 3ம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, மணிப்பூரே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

Advertisment

இரண்டு சமூகத்தை சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை மோசமானதையடுத்து, மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், இணைய சேவையும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருவதை உணர்ந்த மக்கள், குடும்பத்தோடு அகதிகளாக மிசோரம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதனால், பாஜக அலுவலகங்களும் பாஜக அமைச்சரின் வீடுகளும் அடித்து நொறுக்கப்படுகின்றன. பாஜகவினர் நடமாடுவதற்கு அச்சப்படும் பகுதியாக மணிப்பூர் மாறி வருகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை மற்றும் கல்வித் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீவைக்கப்பட்டது. அதேபோல் மணிப்பூர் அரசின் ஒரே பெண் அமைச்சரான நெம்சா கிப்ஜென்னின் வீட்டுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது. இதில், நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அமித்ஷா நேரடியாக மணிப்பூர் சென்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினாலும் மக்கள் யாரும் அசைந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஒரு மாதமாக பற்றியெரிந்து வரும் மணிப்பூர் குறித்து இந்திய பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் கூறாததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இப்படியே போனால், பாஜகவினர் இருப்பதற்கே மணிப்பூர் மக்கள் இடம்தர மாட்டார்கள் என்பதை உணர்ந்துகொண்ட பாஜக எம் எல் ஏக்கள், டெல்லிக்கு விரைந்துள்ளனர். அங்கு சென்று பிரதமர் மோடியிடம் இதுகுறித்து பேசவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ‛‛மணிப்பூரில் ஆட்சியில் உள்ள பாஜக அரசை பதவி நீக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது. அரசியலமைப்பின் 356வது சட்டப்பிரிவின் கீழ் மத்திய ஆட்சியை கொண்டு வர வேண்டும். அமித்ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்'' என கடுமையாக சாடியுள்ளார். பிரதமர் மோடியின் மவுனமும் பிரச்சனையை கையாள முடியாமல் மத்திய அரசு திணறுவதையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.