டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; பதற்றம் அதிகரிப்பு!

Peasants marching towards Delhi; Increasing tension

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் இன்று (13.02.2024) விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்தா ராய் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

இதனால் திட்டமிட்டபடி விவசாயிகள் பேரணியாக சென்று டெல்லியை முற்றுகையிட முடிவு செய்தனர். அதன்படி உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 200 சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் இருந்து ஹரியானா வழியாக 2500 விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் பேரணியாக செல்ல முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க ஹரியானா, உத்தரப்பிரதேசம் மாநில எல்லையில் உள்ள சாலைகளில் இரும்பு ஆணிகள், கான்கீரிட்களை கொண்டு பிரம்மாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் டெல்லி - ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாலையின் நடுவே பிரம்மாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார், துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் டிரோன்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. போராட்டம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவதை தடுக்கவும், சமூக வலைத்தளங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தடுக்கும் வகையில் ஹரியானாவில் டீசல் விற்பனைக்கும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் டிராக்டர் ஒன்றுக்கு 10 லிட்டர் டீசலுக்கு மேல் வழங்கக்கூடாது எனவும் ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் - ஹரியானா எல்லையில், சர்வதேச எல்லையை போல் துணை ராணுவ படைகளை குவித்துள்ளதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் முற்றுகை போராட்டத்துக்காக சாம்பு எல்லை வழியாக இரு சக்கர வாகனங்களில் டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் குவிந்து வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Delhi Farmers
இதையும் படியுங்கள்
Subscribe