டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்; தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரம்! 

Peasants gone to Delhi Preventive measures are serious

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்தா ராய் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நேற்று (13.02.2024) பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி தொடங்கினர். அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஹரியானா எல்லையில் தடுக்கப்பட்ட விவசாயிகள், இன்று டெல்லியை நோக்கி டிராக்டர் ஊர்வலத்தை தொடர திட்டமிட்டுள்ளனர். மேலும் டெல்லி திக்ரி எல்லையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புகளை விவசாயிகள் இழுத்துச் சென்றதால், இரவு, பகலாக கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சாலைகளில் ஆணிகளை பதித்தும், கம்பி வேலிகளை அமைத்தும் விவசாயிகளை தடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. டெல்லியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு துணைராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியையே நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Delhi Farmers
இதையும் படியுங்கள்
Subscribe