Peace will return to Manipur soon PM Modi in Independence Day speech

நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும் செங்கோட்டையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர், போலீசார் என 40 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக விவசாயிகள், தொழிலாளர்கள் என ஆயிரத்து 800 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரையில், “இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மக்கள்தொகையின் அடிப்படையில் தற்போது முன்னணியில் உள்ளது. இவ்வளவு பெரிய நாட்டில், எனது குடும்பத்தைச் சேர்ந்த 140 கோடி உறுப்பினர்களும் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கிய அனைத்து துணிச்சலான இதயங்களுக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, நம்மிடம் மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய மூன்றும் சேர்ந்து தேசத்தின் கனவுகளை நனவாக்கும் திறனைக் கொண்டுள்ளன.

Advertisment

தேசம் மணிப்பூர் மக்களுடன் துணை நிற்கிறது. அமைதியின் மூலமே தீர்வு காண முடியும். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும். இயற்கை பேரிடர் நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இதை எதிர்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது அனுதாபங்களைத்தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளின் தாக்கம் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும். இந்தியா இந்த உலகத்திற்கே மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது” என உரையாற்றி வருகிறார்.