Advertisment

காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி குறித்து ப.சிதம்பரம் கருத்து...

p.chidambaram about congress meeting

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நேற்று (24/08/2020) காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. காங்கிரஸ் காரிய குழுக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ள நிலையில், தலைமை விவகாரத்தில் விரைவில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என கபில் சிபல், சசிதரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவுகான், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். மேலும் நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில், இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்றும், சோனியா- ராகுல் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்த செய்தியாளரின் கேள்விக்குபதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய மூத்த தலைவர்கள் அனைவரும் கட்சியின் நிலை குறித்து கவலை தெரிவித்துத்தான் கடிதம் எழுதினார்கள். பாஜகவைத் தீவிரமாக எதிர்த்துவரும் ராகுல் காந்தியைப் போல், என்னைப் போல், கடிதம் எழுதிய தலைவர்களும் பாஜகவைத் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதாக ராகுல் காந்தி யாரையும் சொல்லவில்லை.

காங்கிரஸில் உள்ள மூத்த தலைவர்கள் தங்கள் மனதில் இருக்கும் கவலைகளைத் தெரிவித்தார்கள், அவர்களின் குறைகள் அடையாளம் காணப்பட்டன. அனைத்து இடங்களிலுமே அதிருப்தி என்பது இருக்கும். உண்மையில், சில அதிருப்திகள்தான் மாற்றத்தை கொண்டு வருகின்றன. அதிருப்தி இல்லாவிட்டால், மாற்றம் என்ற ஒன்று நடக்கவே நடக்காது. காங்கிரஸ் நிர்வாகிகள் சொன்ன குறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான தீர்வும் காணப்பட்டிருக்கிறது.

மிக விரைவாக காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறதென்றால், அங்கு கேள்விகள், அதிருப்திகள் இருக்கத்தான் செய்யும். அவை கட்சியை முன்னோக்கி நகர்த்தி சென்று, இன்னும் வீரியமாக செயல்பட வைக்கும். செயற்குழுக் கூட்டத்தில் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறோம். இது கட்சியை முன்னோக்கி நகர்த்தி சென்று, இன்னும் வீரியமாக செயல்பட வைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

p.chidambaram Rahul gandhi congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe