
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. 175 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில், 135 இடங்களைக் கைப்பற்றி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பொறுப்பேற்றார். தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் உள்ள ஜன சேனா 21 தொகுதிகளிலும், பா.ஜ.க 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
குறைவான உறுப்பினர்களை மட்டுமே வைத்திருந்ததால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காமல் போனது. தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணி கட்சியான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. மேலும், பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. கூட்டணி கட்சிக்கு எதிர்க்கட்சியும், அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதால் ஆந்திரப் பிரதேசத்தில் ஒற்றை தலைமை ஆட்சி நடந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதே சமயம், எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கும் வரை சட்டப்பேரவையில் கலந்து கொள்ள மாட்டோம் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் சட்டமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தங்கள் கட்சியை பிரதான எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். அதன் பின்னர், ஜெகன் மோகன் ரெட்டி தனது கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார். இது குறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது, “பிரதான எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே மக்கள் பிரச்சினைகளை எழுப்ப சட்டமன்றத்தில் தேவையான நேரம் கிடைக்கும். தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க முயற்சிக்கிறது” என்று கூறினார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வைத்த கோரிக்கைக்கு, சட்டமன்றத்தில் துணை முதல்வர் பவன் கல்யாண் பதிலடி கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது, “ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி என்பது கூச்சலுக்கு ஒத்த சொல். அவர்கள் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும்போது மக்களின் ஆணையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஜன சேனா இரண்டாவது கட்சி. வெறும் 11 இடங்களைக் கொண்ட ஒரு கட்சி 2019 இல் தாங்கள் அரசாங்கத்தை அமைத்ததாக நினைத்தது. வெறும் 11 இடங்களுடன், இரண்டாவது பெரிய கட்சியாகக் கூட இல்லாத நிலையில், அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்குவதன் பயன் என்ன?. அவர்களுக்கு ஒருபோதும் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க முடியாது. வாக்கு சதவீதத்தில் ஜெர்மனி ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது. வாக்குப் பங்கின் அடிப்படையில் அவர்கள் கோர விரும்பினால் அவர்கள் ஜெர்மனிக்குச் செல்ல வேண்டும்” என்று கிண்டலாக பதிலளித்தார்.