நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்று (27-10-24) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட த.வெ.க தலைவர் விஜய், தனது கட்சிக் கொள்கை குறித்தும், கட்சியின் செயல்பாடு குறித்தும் பேசியிருந்தார்.
மதச்சார்பற்ற சமூக நீதி, ஆட்சி அதிகாரம், இருமொழிக் கொள்கை, தன்னாட்சி உரிமை, மதச்சார்பின்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு, உற்பத்தித் திறன், போதையில்லா தமிழகம் உள்ளிட்ட பல கொள்கைகளை முன்னிறுத்தி விஜய் பேசியிருந்தார். மேலும் அவர், பிரித்தாலும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம், ஊழல் மலிந்த அரசியல் ஆகியவை தான், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எதிரி என்று கூறியிருந்தார். இது தற்போது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
இதனிடையே நடிகர் விஜய்யின் அரசியல் மாநாட்டிற்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, விஷால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், துறவிகள் மற்றும் சித்தர்களின் பூமியான தமிழ்நாட்டில் விஜய் ஒரு அரசியல் பயணத்தைத் தொடங்கியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.