Skip to main content

விமானம் தரையிறங்கிய வேகத்தில் பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

The passengers were in for a shock as the plane landed

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் ஒன்று  தரையிறங்கிய வேகத்தில் மீண்டும் மேலே எழும்பியது. இதனால் அதிலிருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

 

சண்டிகரிலிருந்து சுமார் 100 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகா ஏர்லைன்ஸ் விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் திங்கட்கிழமை இரவு 8.40 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், விமானம் தரையிறங்கியதும் மீண்டும் மேலே பறக்க ஆரம்பித்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

 

இரவு 9:15 மணிக்கு தரையிறங்க வேண்டிய அந்த விமானம் முன்னரே தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. எனவே விமானம் தரையிறக்கப்படுவதற்கான ஒப்புதல் கிடைக்காததால் சிறிது நேரத்திற்குள் விமானத்தை பறக்கவிட்டு மீண்டும் சரியான ஒப்புதல் பெறப்பட்ட பிறகு விமானம் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
chennai airport unknown person email related issue

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு  நள்ளிரவில் இ - மெயில் ஒன்று வந்துள்ளது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் குழு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனைக்குப் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் எனத் தெரியவந்தது. சென்னை விமான நிலையத்திற்குக் கடந்த 2 வாரத்தில் 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் இதுவாகும். இந்த வெடிகுண்டு புரளியைக் கிளப்பும் மர்ம நபர்கள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு நேற்று (16.06.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தின் பயணிகள் தங்கும் அறைகள், தண்டவாளங்கள், ரயில்வே நடைமேடைகள், பயணிகள் பொருட்கள் வைக்கும் இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக திருநெல்வேலியின் பல்வேறு பொது இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதே சமயம் இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விசாரணையில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சிவபெருமாள் (வயது 42) என்பவரை நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

'தமிழகத்தை விட்டு வெளியேறுகிறோம்' - பரந்தூர் மக்கள் முடிவு

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
 'We are leaving Tamil Nadu' - People of paranthur decide

இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் பரந்தூரில் 5,358 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த விமான நிலைய பணிக்காக மேலும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் மேலும் 147.11 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிக்கு வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தத் திட்டத்திற்காக பரந்தூர் அருகே உள்ள வளத்தூர், தண்டலூர், சிங்கிலி பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நீர்நிலைகள் மற்றும் தரிசு நிலங்களை தவிர்த்து குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளது.

 'We are leaving Tamil Nadu' - People of paranthur decide

தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை விட்டு வெளியேறுவதாக அவர்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் ஜூன் 24ஆம் தேதி ஆந்திராவின் சித்தூர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க திட்டம் உள்ளதாகவும், பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் ஆந்திராவிற்கு இடம் பெயர இருப்பதாகவும் போராட்டக் குழு அறிவித்துள்ளது. தமிழகத்தை விட்டு வெளியேறுவது பெருமைக்குரியது எனவும் போராட்டக் குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் அடைய முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ள போராட்டக் குழு தலைவர் ரவிச்சந்திரன், ஆந்திர மாநிலத்தை நோக்கி ஜூன் 24இல் கண்ணீர் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பரந்தூர் மக்களின் இந்த முடிவு பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.