Skip to main content

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி; போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
Parliamentary Security Disruption information released in the police investigation

நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் திடீரென அத்துமீறி மக்களவை பகுதியில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் கையில் வண்ணத்தை உமிழும் புகை போன்ற வெடி பொருள் இருந்ததாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். இருவரும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை அவர்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கமிட்டதோடு தங்கள் காலணியில் மறைத்து வைத்திருந்த புகையை உமிழும் பொருளை எடுத்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீசார் நடத்திய விசாரணையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் எவ்வித ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்திற்குள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு வெளியே பிடிபட்ட இருவரும் செல்போன், கைப்பை என எதையும் எடுத்து வரவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் நாடாளுமன்றத்துக்குள் நடந்த அத்துமீறல் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உட்பட எந்த ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்துக்குள் இருவரும் நுழைந்தது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசியவரை விரட்டிப் பிடித்து சரமாரியாக எம்.பி.க்கள் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்