Parliament passes bill to bring co-operative banks under RBI supervision

Advertisment

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் மசோதா, மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அரசு கடந்த ஜூன் 26-ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பித்தது. கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், அரசியல் சாசனத்தின்படி, நாடாளுமன்றத்திற்கு இதுசம்பந்தமாக சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை எனக்கூறி, மத்திய அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், இந்த அவசரச் சட்டத்திற்கு மாற்றாக, இதுதொடர்பான சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் இந்தச் சட்டத்திருத்தம் குறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தம் முழுமையாக வங்கி முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் செய்யப்பட்டுள்ளது. வங்கிச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு சொசைட்டிக்கு மட்டுமே இது பொருந்தும். கரோனா காலத்தில் பெரும் அழுத்தத்தில், நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் பல கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. வர்த்தகரீதியான வங்கி விதிகளுக்கு உட்பட்டு இருந்ததால், யெஸ் வங்கியின் சிக்கலை அரசால் விரைவாகத் தீர்க்க முடிந்தது. ஆனால், பி.எம்.சி வங்கிச் சிக்கலை இன்னும் தீர்க்க முடியவில்லை" எனக் கூறினார். நிதியமைச்சரின் உரைக்குப் பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

Ad

இதன்படி கூட்டுறவுச் சங்க பதிவாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இனி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும். பொதுமக்களின் சேமிப்பு தொகைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், 1,482 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.