the Palestinian issue; The central government's explanation of India's position!

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களைச்சந்தித்து பேசினார். அப்போது அவர் பாலஸ்தீனம் விவகாரம் குறித்து பேசுகையில், “பாலஸ்தீனத்தை இந்தியா எப்போதோ அங்கீகரித்துவிட்டது. 1980களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துவிட்டது. எனவே இந்தியாவின் இந்த முடிவில் மாற்றம் இல்லை. நார்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தற்போதுதான் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன” எனத் தெரிவித்தார். சமீபத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளும் அங்கீகரித்திருந்தது குறிப்படத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட் விவகாரம் குறித்து பேசுகையில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய பாஸ்போர்ட் சட்டம் 1967 இன் விதிகளின்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்நடவடிக்கை எடுத்துள்ளது. மே 23 ஆம் தேதி அன்று, நாங்கள் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க அவருக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளோம். எனவே நாங்கள் அவரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். மேலும் சட்ட விதிகளின்படி அடுத்த நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.