காதலுக்காகத் தனது 4 குழந்தைகளுடன் இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்

Pakistani woman who converted to Hinduism with her 4 children for love

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணும் அவரது நான்கு குழந்தைகளும், உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக வசித்து வந்தனர். இந்தத் தகவல் அந்த பகுதி காவல்துறையினருக்குத்தெரிய வந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா, அவரது நான்கு குழந்தைகள் மற்றும் சச்சின் என்பவர் உட்பட ஆறு பேரைக் கைது செய்து விசாரித்து வந்தனர்.

அந்த விசாரணையில், ‘உத்தரப் பிரேதச மாநிலம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர் சச்சின். இவர் ஆன்லைனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த போது பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சீமாவுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் குலாம் ஹைதர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் கொண்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

அதைத் தொடர்ந்து தனது காதலனைப் பார்ப்பதற்கு இந்தியா வரத் திட்டமிட்ட சீமா, தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து தனது காதலி மற்றும் குழந்தைகள் தங்குவதற்கு சச்சின் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியுள்ளார்’ என்பது தெரிய வந்தது. இதையடுத்து சச்சின், சீமா, நான்கு குழந்தைகள், வீட்டின் உரிமையாளர் என மொத்தம் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் இவர்களின் காதலை சச்சினின் பெற்றோர் ஏற்றுள்ளனர். மேலும், அவர்களை கிரேட்டர் நொய்டாவில் உள்ள தங்களது வீட்டில் தங்க அனுமதித்துள்ளனர். இதனிடையே, முஸ்லிம் பெண்ணான சீமா தனது காதலன் சச்சினுக்காக இந்து மதத்துக்குமாறியுள்ளார். சீமா என்பது இந்து, முஸ்லிம்களுக்கு பொதுப் பெயர் என்பதால் அதே பெயரையே வைத்துக் கொண்டுள்ளார். ஆனால், பின்னால் சேர்க்கப்பட்டிருந்த கணவர் ஹைதரின் பெயரை நீக்கி சீமா சச்சின் என்று தனது பெயரை மாற்றியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனது நான்கு குழந்தைகளின் பெயர்களையும் ராஜ், பிரியங்கா, பாரி மற்றும் முன்னி என்று இந்து பெயர்களாக மாற்றிவிட்டார். சீமாவுக்கும்அவருடைய குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்குமாறு பிரதமர் மோடி, உத்தரப் பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கங்கையில் புனித நீராடிய பிறகு இந்து முறைப்படி சச்சின், சீமா ஆகிய இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்படும் என்று சச்சின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

India Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe