கும்பமேளாவில் கரைக்க 400 இந்துக்களின் அஸ்தியைக் கொண்டு வந்த பாகிஸ்தான் பூசாரி!

Pakistani priest brings ashes of 400 Hindus to be immersed at Maha Kumbh Mela

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆன்மீக திருவிழாவான ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும், இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் புனித நீராடி வருகின்றனர்.

தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரை நோக்கி வருவதால் அந்த இடம் முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்து வருகின்றது. இது ஒரு புறமிருக்க, பிரயாக்ராஜ் நோக்கி செல்லும் ரயிலில், இடம் கிடைக்காததால், அந்த ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 400 இந்துக்கள், சீக்கியர்களின் அஸ்தியை மகா கும்பமேளாவில் கரைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து பூசாரி ஒருவர் இந்தியா வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பஞ்சமுகி அனுமன் கோயில் மற்றும்ம் சுடுகாட்டின் தலைமை பூசாரியாக ராம்நாத் மிஸ்ரா என்பவர் இருந்து வந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவிற்கு பாகிஸ்தானில் இருந்து தனது குடும்பத்துடன் வந்த ராம்நாத் மிஸ்ரா இந்தியா வந்துள்ளார். அதன் பின்னர், சுவாமி அதோக்ஷஜானந்தின் முகாமில் தனது ஒன்பது வயது மகனுக்கு புனித நூல் சடங்கு செய்தார். அதோடு, பாகிஸ்தானில் இருந்து 400 இந்தியர்கள் மற்றும் சீக்கியர்களின் அஸ்தியை புனித நதிகளில் கரைப்பதற்காக எடுத்து வந்துள்ளார்.

இது குறித்து ராம்நாத் மிஸ்ரா கூறியதாவது, “வரும் 21ஆம் தேதி நிகோம்பாத் காட்டில் 400 இந்துக்கள், சீக்கியர்களின் அஸ்தி அடங்கிய கலசங்களை வைத்து பூஜை நடத்தப்படும். அதன் பின்னர், பிப்ரவரி 22ஆம் தேதி டெல்லியில் இருந்து ஹரித்வாருக்கு ரத ஊர்வலத்தில் எடுத்து செல்லப்பட்டு, அஸ்தியை கரைக்கப்படும்” என்று கூறினார்.

ashes Pakistan priest
இதையும் படியுங்கள்
Subscribe