/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pak-army-art.jpg)
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதோடு ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதோடு ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பயங்கரவாதிகளுக்கும், இந்தியராணுவப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் சில இடங்களில் பாகிஸ்தான் இராணுவம் சிறிய ரக துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு இந்திய ராணுவத்தின் சார்பில் திறம்பட பதிலடி கொடுக்கப்பட்டதாக ராணுவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி விரைவில் ஸ்ரீநகர் மற்றும் உதம்பூருக்குப் புறப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்திப் போது அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மூத்த ராணுவத் தளபதிகள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களின் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். பள்ளத்தாக்கில் நடந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் அங்குள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற முயற்சிப்பது குறித்து அவர் ஆய்வு செய்வார் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய சிந்து நதிநீரை திறந்து விடுவதை இந்தியா நிறுத்தியது. ஜம்மு காஷ்மீரின் ராம்பன் எனும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாக்லிகார் அணையில் இருந்து நதிநீர் பாகிஸ்தானுக்கு சென்று வந்தது. அந்த நதிநீரை, பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை வழங்கப்படாது என்று மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. அதன்படி, ராம்பன் அணையின் மதகுகளை மூடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)