ADVERTISEMENT

பாகிஸ்தான் வான்வெளியில் ஏர் இந்தியா விமானம்... ஒரு சுவாரசிய சம்பவம்...

04:58 PM Apr 04, 2020 | kirubahar@nakk…

பாகிஸ்தான் வான்வழி வழியாக ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரத்திற்கு உதவிப்பொருட்களை எடுத்துச்சென்ற இந்திய விமானத்தைப் பாகிஸ்தான் விமான போக்குவரத்துக்கு துறையினர் பாராட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,000-ஐ கடந்துள்ளது. 2,28,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். உலகமே முடங்கிப்போயுள்ள இந்த சூழலில் சர்வதேச நாடுகள் பலவும் பல்வேறு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் இந்தியாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. அதேபோல கனடா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து சிக்கியிருந்த நூற்றுக்கணக்கானவர்களைச் சிறப்பு விமானம் மூலம் இந்தியா திருப்பி அனுப்பிவைத்தது.

இந்த விமான பயணத்தின்போது, பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் இந்திய விமானங்களின் சேவையைப் பாராட்டினார் என்பதைது இந்திய விமானி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "இது மிகவும் பெருமைமிகு தருணம். நாங்கள் பாகிஸ்தானின் வான்வழி எல்லைக்குள் நுழைந்ததும் பாகிஸ்தான் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர், 'அஸ்ஸலாம் அலைகும்' பிராங்பேர்ட்டுக்கு நிவாரண பொருட்களைக் கொண்டுசெல்லும் இந்திய விமானங்களை கராச்சி கட்டுப்பாட்டு அறை வரவேற்கிறது' என்றார். மேலும், 'இந்த மோசமான நோய்த்தொற்று சூழ்நிலையில் நீங்கள் விமானங்களை இயக்குகிறீர்கள் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உங்களுக்கு வாழ்த்துகள்' எனப் பாகிஸ்தான் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார். அவரின் வாழ்த்துகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்தோம்.

அதேபோல அதற்கடுத்து ஈரான் எல்லையில் நுழைந்தபோது மேலுமொரு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. மத்திய கிழக்கு நாடு ஒன்று, தங்கள் நாட்டின் 1000 மைல்களுக்கு மேலான நேரடி விமான வழியை எந்தவொரு நாட்டின் விமானத்திற்கும் கொடுத்து நான் பார்த்ததே இல்லை. ஆனால் நாங்கள் உள்ளே சென்றபோது, ஈரான் சுமார் 1000 மைல்களுக்கு ஒரு நேரடி வழித்தடத்தை எங்கள் விமானிகளுக்காக அனுமதித்தது. ஈரான் வான்வெளியின் நேரடி பாதை அவர்களின் பாதுகாப்புத் துறைக்கான விமானங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். பிறகு அந்த பாதை வழியாக நாங்கள் பயணித்து ஈரான் எல்லையைக் கடக்கும்போது அவர்களும் எங்களை வாழ்த்தினர்" எனத் தெரிவித்துள்ளார். கரோனா பாதுகாப்பு உடைகளை அணிந்தவாறு சுமார் 20 மணிநேரம் தொடர் பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய, இந்த ஏர் இந்தியா விமானக்குழு பாதுகாப்பு நடவடிக்கையாக தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT