Skip to main content

"யாரைத் தேர்வு செய்வது என்பது நம்முடைய அதிகாரம்" - நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடி ஒப்புதல் தர ப.சிதம்பரம் கோரிக்கை!

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

CHIDAMBARAM

 

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் , நேற்று நடைபெற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைத் தேர்வு செய்து அனுமதிப்பது மாநில அரசின் உரிமை என தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "‘நீட்’ தேர்வை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை நான் வரவேற்கிறேன். நீட் தேர்வில் உள்ள குறைகளையும் பாகுபாட்டையும் பல முறை எடுத்துச் சொல்லியாகி விட்டது. மாநில அரசின் உரிமைகளை நீட் தேர்வு பறிக்கிறது. மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைத் தேர்வு செய்து அனுமதிப்பது மாநில அரசின் உரிமை. இதில் மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும்? நம் மாநிலம், நமது  அரசுக் கல்லூரிகள், நமது மாணவர்கள், யாரைத் தேர்வு செய்து அனுமதிப்பது என்பது நம்முடைய அதிகாரம் அல்லவா? தமிழ்நாடு ஆளுநர் இந்த மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.