
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்திய தேசமே மூச்சுவிட திணறிக்கொண்டிருக்கிறது. தலைநகர் டெல்லியிலோ நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ஆக்சிஜன் கிடைக்காததால் டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளைக் காப்பாற்ற முடியாமல் தடுமாறுகின்றன. இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள், ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், அரசுக்கு உதவுவதற்கு முன் வந்துள்ளன இந்தியாவின் பிரபல நிறுவனங்கள். குறிப்பாக, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம், ஐ.டி.சி. நிறுவனம், டாடா நிறுவனம், ஜிண்டால் நிறுவனம் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் ஆக்சிஜன் டேங்கர்களை அனுப்பி வைக்க முன்வந்துள்ளன. பிரதமர் மோடியின் நண்பரான அதானியும் தனது நிறுவங்களின் மூலம் குறிப்பிட்டளவிலான ஆக்சிஜன் டேங்கர்களை அனுப்பி வைக்க ஒப்புதல் தந்துள்ளார்.
டாடா ஸ்டீல் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் 300 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க சம்மதித்து, அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதேபோல, லிண்டே இந்தியாவுடன் இணைந்துஆக்சிஜனை எடுத்துச் செல்ல பயன்படுத்துவதற்காக தலா 20 டன் எடையுள்ள 24 கிரையோஜெனிக் கண்டெய்னர்களை மத்திய அரசுக்கு கொடுக்க முன்வந்துள்ளது ஐ.டி.சி. நிறுவனம்.
மேலும், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம், தங்களின் ஆக்சிஜன் உற்பத்தி திறனை தினமும் 900 டன்னாக அதிகரிக்கச் செய்ய தீர்மானித்துள்ளது. அதன்படி தமிழகம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள தங்களின் ஆலைகளில் இருந்து 20,000 டன் ஆக்சிஜனை தயாரித்து இந்த மாத இறுதியில் மத்திய - மாநில அரசுகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளது. இப்படி இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் ஆக்சிஜனை தயாரித்து வழங்க முன்வந்திருப்பதால், பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறது.
Follow Us