Skip to main content

“பிரதமர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வார்” முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

Published on 05/12/2022 | Edited on 06/12/2022

 

“Our Prime Minister will take advantage of this opportunity” CM Stalin

 

அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டினை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்துள்ளது. மாநாட்டைச் சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார்.

 

ஜி20 ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் முதல்வர்கள் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் ஜி20 கூட்டமைப்பை எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

 

இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜி 20 மநாடு மற்றும் அது தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று உறுதியளித்துள்ளார். 

 

மேலும், “அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி' ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன். காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கியுள்ளோம். உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் வாய்ப்புக்காகப்  பிரதமருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“90% மக்களுக்கு பணத்தைப் பகிர்ந்தளிப்பேன்” - பிரதமருக்கு ராகுல் காந்தி அதிரடி பதில்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says I will distribute money to 90% people

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்திருந்தார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

Rahul Gandhi says I will distribute money to 90% people

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தைத் தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்தார்.

Rahul Gandhi says I will distribute money to 90% people

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதில் பேசிய அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீது தான் ஆர்வம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சாதியை கணக்கெடுப்பது என்று நினைக்க வேண்டாம். அதில் பொருளாதார மற்றும் நிறுவனக் கணக்கெடுப்பையும் சேர்ப்போம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நிலைமை என்ன?, எந்தத் திசையில் இருக்க வேண்டும்? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்துவோம். 

90 சதவீத இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று நான் கூறியதாக பிரதமரும், பா.ஜ.கவும் என்னை விமர்சிக்கிறார்கள். காங்கிரஸின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கையைக் கண்டு பிரதமர் பயந்துவிட்டார். ஓ.பி.சி மற்றும் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஏழைகள் பட்டியலில் இருப்பார்கள். ஆனால் பணக்காரர்கள் பட்டியலில் அவர்களைக் காண முடியாது. ராமர் கோவில் மற்றும் பாராளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் ஒரு பட்டியலினத்தவர், பழங்குடியினரை கூட பார்க்கவில்லை. 90% மக்கள் இதை புரிந்துகொள்கிறார்கள்.

யாருடைய பணம் ஊடகங்களுக்கு செல்கிறது? அரசு பணம் கொடுக்கிறது. ஜி.எஸ்.டியில் யாருடைய பணம் வருகிறது? இது 90 சதவீத மக்களின் பணம். நான் நீதித்துறையைப் பார்த்தேன். 650 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். ஆனால், 90 சதவீத மக்கள் 100 நீதிபதிகளின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர். அது மிகச் சிறியவர்கள், நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அடைவதற்குள் அது முடிந்துவிட்டது. 25 கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று கூறினார்.

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.