/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramadoss-in_25.jpg)
ஒடிசாதொடர்வண்டி விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புக்கு பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரிஷா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தின் பாஹானாகா தொடர்வண்டி நிலையத்தில் சென்னை கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டி, பெங்களூர் - ஹவுரா விரைவுத் தொடர்வண்டி, சரக்குத் தொடர்வண்டி ஆகிய மூன்று தொடர்வண்டிகள் அடுத்தடுத்த பாதைகளில் ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்றின் மீது ஒன்றாக தடம் புரண்ட விபத்தில்280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து நல்வாய்ப்புக் கேடானது.
விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டியில் சென்னைக்கு வருவதற்காக 867 பேர் முன்பதிவு செய்திருந்ததாகவும், அவர்களில் 88 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு பயணம் செய்தவர்களில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உள்ளிட்ட விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆபத்தான நிலையில் இல்லாத, காயமடைந்தவர்களை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவம் அளிப்பதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு ஆராய வேண்டும்.
விபத்தில் உயிரிழந்தஅனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த அனைவரும் உடல்நலம் பெற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு முறையே ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாகக்கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)