Opposition parties condemn appointment of Delhi Police Commissioner

முன்னாள் சி.பி.ஐ. ஸ்பெஷல் டைரக்டர் ராகேஷ் அஸ்தானாவை டெல்லியின் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

Advertisment

மத்திய புலனாய்வுத்துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநராக இருந்தவர் ராகேஷ் அஸ்தானா ஐ.பி.எஸ். அப்போதைய சி.பி.ஐ.யின் இயக்குநர் அலோக் வர்மாவும் அஸ்தானாவும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதனால் மத்திய புலனாய்வுத்துறையின் நேர்மை மீது களங்கம் ஏற்பட்டது. அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது பிரதமர் மோடியின் அலுவலகம். இதனால் தேசிய அளவில் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தின.

உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் மீண்டும் சி.பி.ஐ. இயக்குநராக நியமிக்கப்பட்டார் அலோக் வர்மா. இதனை ஜீரணிக்க முடியாத மத்திய அரசு, அந்த பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்தது. இந்தநிலையில், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராகேஷ் அஸ்தானாவை எல்லை பாதுகாப்புப் படையின் இயக்குனர் ஜெனரல் பதவியில் நியமித்தது உள்துறை அமைச்சகம். பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் இது நடந்தது.

Advertisment

இந்தச் சூழலில், கடந்த 31-ந்தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற ராகேஷ் அஸ்தானாவை, டெல்லியின் போலீஸ் கமிஷனராக நியமித்திருக்கிறது மோடி அரசு. இந்த நியமனத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ராகேஷ் அஸ்தானாவின் நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என்று டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.