
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அதாவது 9 இடங்களில் இலக்குகள் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக பகல்பூர் என்ற இடமானது, ஜெய்ஷ் - இ - முகமது என்ற தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய பயிற்சி மையமாக இருக்கிறது எனவும், அங்கு அதன் தலைவர் மசூத் ஆசாத்தினுடைய வீடு இருக்கிறது. அதோடு சுமார் 600 தீவிரவாதிகளுடைய வீடும் அப்பகுதியில் உள்ளது என்ற தகவலை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ஜெய்ஷி முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராகவும், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக உள்ள மசூத் ஆசாத்தினுடைய குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பகல்பூர் என்ற பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மசூத் ஆசாத்தின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற அந்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் மசூத் அசாரீன் வீடும் தகர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மசூத் அசாரின் சகோதரர் ரவுஃப் அஸ்காரின் மகனும் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.