ONE NATION ONE ELECTION 5 thousand people comment

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

Advertisment

அதே சமயம் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்தச் சூழலில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி (23.09.2023) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றியும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்தும் இந்த குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையில் தேர்தல் நடத்துவது குறித்து ஜனவரி 15 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம் எனக்கடந்த 5 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த ஏதுவாக தற்போதைய சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது, நிர்வாக கட்டமைப்புகளில் மாற்றம் செய்வது குறித்து பொதுமக்கள் ஆலோசனை கூறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இது குறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை onoe.gov.in அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் என ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவின் செயலாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு இதுவரை சுமார் 5000 பேர் தங்களது கருத்துகளைத்தெரிவித்துள்ளனர் எனத்தகவல் வெளியாகியுள்ளது.