Skip to main content

அலட்சியத்தில் அரசு; பிணவறையில் இருந்த மகனை மீட்டு சிகிச்சை தந்த தந்தை

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

odisha train incident west bengal son and father related incident viral 

 

ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சரக்கு இரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 275 பேர் இறந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்கள் தற்காலிக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.

 

துயரமான இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும் இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய தங்களது உறவுகளை மீட்கவும், விபத்தில் இறந்த தங்களின் உறவினர்களின் உடலை சொந்த இடத்திற்கு எடுத்துச் செல்லவும் பலரும் பல கிலோ மீட்டர் பயணம் செய்து வருகின்றனர்.

 

மேற்கு வங்க மாநிலம் ஹௌரா பகுதியைச் சேர்ந்தவர் ஹெலாரம் என்பவரின் மகன் பிஸ்வஜித். இவர் ஹெளரா பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் விபத்தில் சிக்கிய கோரமண்டல் விரைவு இரயிலில் பயணித்துள்ளார். அந்த இரயில் விபத்தில், சிக்கியது எனும் தகவல் அறிந்த பிஸ்வஜித்தின் தந்தை ஹெலாரம், உடனடியாக தனது மகனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பிஸ்வஜித், தனது தந்தையிடம் சிறிது நேரம் பேசியுள்ளார். ஆனால், அப்போதே அவர் மிகவும் சோர்வாகப் பேசியுள்ளார். இதன் மூலம், பிஸ்வஜித் விபத்தில் சிக்கியிருந்தாலும், உயிருடன் இருக்கிறார் என அவரது தந்தை ஹெலாரம் நம்பிக்கையுடன் இருந்துள்ளார்.

 

சிறிது நேரம் கழித்து ஹெலாரம் மீண்டும் பிஸ்வஜித்துக்கு தொடர்பு கொண்டபோது அவர் தனது தந்தையின் அழைப்பை ஏற்கவில்லை. இதனால், பதற்றம் அடைந்த ஹெலாரம், உடனடியாக மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் மூலம், 230 கி.மீ பயணித்து விபத்து நடந்த பாலசோருக்கு சென்றுள்ளார். அங்கு விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளில் தனது மகனைத் தேடியுள்ளார். ஆனால், அவரால் பிஸ்வஜித்தை கண்டறிய முடியவில்லை. தொடர்ந்து மிகுந்த அச்சத்துடன், விபத்தில் சிக்கி இறந்தவர்களை வைத்திருந்த தற்காலிக பிணவறைக்குச் சென்று அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதங்களுக்கு இடையே மிகுந்த கவலையுடன் தனது மகனைத் தேடியுள்ளார். அங்கு ஹெலாரம், தனது மகன் பிஸ்வஜித்தை கண்டுள்ளார். அப்போது பிஸ்வஜித் உயிருடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஹெலாரம், உடனடியாக அங்கிருந்த அதிகாரிகளிடம் தனது மகன் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்ட பிஸ்வஜித், அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஹெலாரம், அவரது மகனை தன் சொந்த ஊரான மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். தற்போது, பிஸ்வஜித் நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய மகனை 230 கி.மீ. பயணித்து உயிருடன் மீட்ட தந்தையின் செயலைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில், உயிருடன் இருந்த ஒருவர் பிணவறையில் வைக்கப்பட்டது அதிகாரிகளின் அலட்சியப் போக்கை காட்டுவதாகவும், அரசுக்கு மக்கள் உயிர்களின் மீது இருக்கும் அக்கறையின்மையைக் காட்டுவதாகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சரமாரியாகத் தாக்கிய மகன்; கடைசி வரைக்கும் காட்டிக்கொடுக்காத தந்தை - அதிரவைக்கும் சம்பவம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
The son beaten his father in a property dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.