
இந்தியாவில் இருக்கும் இளம் தம்பதிகளிடையே தற்போது அதிகப்படியான விவகாரத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக ஒடிசா மாநில அரசு, திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை மையத்தை திறக்க முடிவு செய்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில், முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஒடிசாவிற்கு வந்தார். அங்கு, அவர் ஒடிசா மாநில மகளிர் ஆணையத்தின் 32வது நிறுவன தின விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில், விவாகரத்து சம்பவங்களை தடுக்கும் விதமாக ஆலோசனை மையத்தை திறப்பது தொடர்பான ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர், ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜியை சந்தித்து பேசினார். அப்போது, திருமணத்திற்கு முன் வாழ்க்கை குறித்து ஆலோசனை மையம் மூலம் சரியான ஆலோசனை வழங்கப்பட்டால் விவாகரத்து குறையும் என்று முதல்வரிடம் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. அவரது பரிந்துரையை ஒடிசா அரசு ஏற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பு குறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் பொறுப்பாளரும், ஒடிசா மாநில துணை முதல்வருமான பிரவதி பரிதா கூறியதாவது, “2025ஆம் ஆண்டை ‘விவாகரத்து தடுப்பு ஆண்டாக’ மாநிலம் கடைப்பிடிக்கும். தேசிய மகளிர் ஆணையத் தலைவரின் பரிந்துரைப்படி திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை மையத்தை திறப்பதற்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை மையங்கள் மூலம் இது போன்ற பல விவாகரத்து பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மாநில அரசின் பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்களை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பாராட்டியுள்ளார்” என்று கூறினார்.