
இந்தியாவில் கரோனா அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு மெல்லக் குறையத்தொடங்கியுள்ளது. இருப்பினும், பல்வேறு மாநிலங்கள் கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. அண்மையில் கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள், தங்கள் மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்துள்ளன.
இந்தநிலையில், ஒடிசா மாநிலமும் ஊரடங்கை வரும் ஜூன் ஒன்றாம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த ஊரடங்கில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 7 மணியிலிருந்து 11 மணிவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதியில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து, திங்கள் கிழமை காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்குமென ஒடிசா அரசு அறிவித்துள்ளது. ஒடிசாவில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகி வருவது குறிப்பிடத்தக்கது.