மக்களவைத் தேர்தலோடு ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, கடந்த 12ஆம் தேதி முதல் அங்கு முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில் 769 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக நேற்று முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். ஒடிசா சட்டசபையில் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. அதில், பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ ஆதிராஜ் மோகன் பாணிக்ரஹி, சட்ட ஒழுங்கு தொடர்பாக மாநில அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி, “ஜூன் 10 முதல் நவம்பர் 22 வரையிலான கடந்த 5 மாதங்களில் 769 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. 41 கூட்டு பலாத்கார வழக்குகள் உள்பட மொத்தத்தில் 509 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக இந்த காலகட்டத்தில் பதிவாகியுள்ளன. 459 கொலை வழக்குகள் மற்றும் 161 பெண்கள் கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐந்து மாதங்களில் பெண்களை சித்திரவதை செய்ததாக 9,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 24 வரதட்சணை தொடர்பான மரணங்கள் மற்றும் 5,398 வரதட்சணை தொடர்பான சித்திரவதை வழக்குகள் பதிவாகியுள்ளன.
சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்பான 52 வழக்குகள் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து ஜாஜ்பூர் மற்றும் கியோஞ்சர், மாஜியின் சொந்த மாவட்டத்திலிருந்து 44 மற்றும் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கோராபுட்டில் இருந்து 40 வழக்குகள் பதிவாகியுள்ளன. 509 பாலியல் வன்கொடுமை வழக்குகளில், கஞ்சம் காவல் மாவட்டம் அதிகபட்சமாக 47 உடன் முதலிடத்திலும், புவனேஸ்வர் நகர்ப்புற காவல் மாவட்டத்தில் 34, மயூர்பஞ்ச் 28 மற்றும் பாலசோர் 27 இல் உள்ளன” என்று தெரிவித்தார்.